வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கருவறைக்குள் மழைநீர் புகுந்தது

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கருவறைக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2021-11-29 17:54 GMT
வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கருவறைக்குள் மழைநீர் புகுந்தது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டையை சுற்றி அகழி உள்ளது. கோட்டைக்குள்  ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேலூரில் கொட்டிதீர்க்கும் கனமழையால் கோவிலில் கடந்த 12-ந் தேதி தண்ணீர் தேங்க தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள குளம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து படிப்படியாக தண்ணீர்மட்டம் உயர்ந்தது. முட்டியளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் கோவிலுக்குள்ளும் தண்ணீர் மட்டம் உயரத்தொடங்கியது.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மண் மூட்டைகள் கொண்டு மூடி உள்ளே உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. ஊற்று மற்றும் தொடர்மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்க தொடங்கியது. 

கருவறைக்குள் தண்ணீர்

தற்போது அம்மன் சன்னதி கருவறைக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரில் நின்றுக்கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து தண்ணீர்மட்டம் அதிகரித்தால் மூலவர் சன்னதிக்குள்ளேயும் தண்ணீர் சென்று விடும்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கோவிலிலுக்குள்ளே பல்வேறு வழிகளில் தண்ணீர் வருகிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர்வெளியேறும் குழாய், ஊற்று போன்றவற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். நாளை (இன்று) கோவிலில் இருந்து தண்ணீர்வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்