ஆம்பூர் அருகே மழைநீரை அகற்றக்கோரி 2 இடங்களில் சாலைமறியல்

ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-29 17:53 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாங்கி நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அருகே உள்ள திருமண மண்டபம் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மண்டபங்களில் நிகழ்ச்சிகள் உள்ளதாக கூறி அங்கு தங்கியிருந்தவர்களை வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாங்கி ஷாப் பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அதே மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனக்கூறி பாங்கி ஷாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் மற்றும் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 

மற்றொரு இடம்

இதேபோல் பெரியவரிகம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த உமராபாத் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல்கள் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்