அசநெல்லிகுப்பத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடம்
அசநெல்லிகுப்பத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிகட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலி
அசநெல்லிகுப்பத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிகட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி கட்டிடம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அசநெல்லிகுப்பம், ஆதிதிராவிடர் காலனி, இருளர் காலனி மற்றும் காட்டு கண்டிகை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 200 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. மேற்கூரை ஓடுகளால் கட்டப்பட்ட 2 கட்டிடங்கள் சேதமடைந்து கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
மற்ற 3 கட்டிடங்களின் சுவர் மற்றும் மேல் தளம் ஆகியவை விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மழைநீர் வகுப்பறைக்குள் கசிந்து வருகிறது. இதனால் வகுப்பறையில் பாடம் நடத்த முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அச்சத்துடன் உள்ளனர்.
பெற்றோர் கோரிக்கை
இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இங்கு பயிலும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. இருக்கும் கட்டிடங்களும் சிதிலமடைந்து உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி அந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர், மாணவர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.