முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-29 16:29 GMT
முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பயிர்க்காப்பீட்டு தொகை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எக்கல், குன்னலூர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த 2020 - 2021-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பாண்டி கடைத்தெருவில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் வடுகநாதன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலெக்சாண்டர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், எடையூர் போலீசார் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்க்கரை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்