குட்டைகள் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன
குட்டைகள் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன
நெகமம்
நெகமம் பகுதியில் தொடர்மழை காரணமாக குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தொடர்மழை
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான பெரிய களந்தை, காட்டம்பட்டி, பனப்பட்டி, தேவனாம்பாளையம், வடசித்தூர் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக இந்தப்பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள், தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக பி.ஏ.பி. வாய்க்காலில் உபரி நீர் செல்வதால், அந்த தண்ணீர் தடுப்பணைகள், குட்டைகளுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
நிரம்பி வழிகின்றன
இதன் காரணமாக இந்தப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், அவைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நெகமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளன. அதில் 15-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 3 ஆண்டு களுக்கு பிறகு தற்போதுதான் அவை நிரம்பி உள்ளன.
வடசித்தூர் தடுப்பணை
அதுபோன்று குட்டைகளும் நிரம்பி உள்ளதாலும், குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. அத்துடன் கட்டாந்தரையாக இருந்த நிலங்கள், புல்வெளியாக மாறி உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.
குறிப்பாக வடசித்தூர் தடுப்பணை நிரம்பி உள்ளதால் அதில் குளித்து இளைஞர்கள் மகிழ்கிறார்கள். இந்த தடுப்பணை நிரம்பி உள்ளதால், 10 கி.மீ. தூரம் சுற்றி உள்ள பகுதிகளான பனப் பட்டி, குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம், மெட்டுபாவி, வெள்ளேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.