தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

பழனி அருகே தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

Update: 2021-11-29 15:44 GMT
பழனி : 

காட்டுயானைகள்
பழனி அருகே உள்ள ரெங்கசாமி மலைக்கரடு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 8 யானைகள் குட்டிகளுடன் உலா வருவதை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் ரெங்கசாமி மலைக்கரடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மலைக்கரடு அருகே உள்ள புளியமரத்துசெட், தேக்கந்தோட்டம், வெட்டுக்கோம்பை ஆகிய கிராம மக்கள், விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெட்டுக்கோம்பை பகுதியில் செல்லப்பன் என்பவரது தோட்டத்தின் வேலியை சேதப்படுத்தி புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த 3 தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயி வேலி சேதமாகி கிடப்பதையும் தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தீவிர கண்காணிப்பு
இதுபற்றி பழனி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயி செல்லப்பன் கூறுகையில், கடந்த 3 நாட்களில் மட்டும் எனது தோட்டத்தில் 12 தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளது. ஆகவே வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க 24 நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்