சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் மழைவெள்ளம் புகுந்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வீடுகளில் மழைவெள்ளம் புகுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமம் கடலோரத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையில் இந்த கிராமத்தின் மெய்யூர் உட்பட பகுதிகளில் மழைவெள்ளம் முழங்கால் அளவுக்குதேங்கியது. சதுரங்கப்பட்டினம் பழங்கால டச்சுக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், அரசு மேனிலைப்பள்ளி வளாகம், பொய்கைகரை, புதிய காலனி, மாதா கோவில்தெரு உட்பட வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின் மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை இறைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் உட்பட அதிகாரிகள் அந்த பகுதிகளை நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து வீதிகளில் மண்மூடிய கால்வாய்களை சீரமைத்து மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது.