அடையாறு ஆற்றை ஆழப்படுத்த நடவடிக்கை; சிறப்பு அதிகாரி அமுதா தகவல்
மழை காலத்தில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்துவிடாமல் தடுக்க அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறப்பு அதிகாரி அமுதா தெரிவித்தார்.
அமுதா ஆய்வு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனி, மூவேந்தர் நகர், பாரதி நகர், சசிவரதன் நகர், குட்வில் நகர், சமத்துவ பெரியார் நகர், வசந்தம் நகர், இரும்புலியூர், அமுதம் நகர், அன்னை அஞ்சுகம் நகர், கண்ணன் அவென்யூ, டி.டி.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தற்போது அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் நீரும் செம்பாக்கம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
மழைநீர் புகுந்த பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணி சிறப்பு அதிகாரி அமுதா, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற உத்தரவிட்டனர்.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தாம்பரம் தீயணைப்பு படையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
அப்போது நிருபர்களிடம் சிறப்பு அதிகாரி அமுதா கூறியதாவது:-
ஆழப்படுத்த நடவடிக்கை
மழை குறைந்து இருந்தாலும் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறி கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி முன்னரே எச்சரிக்கை விடுத்து அவர்களை பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம்.
அடையாறு ஆற்றின் அகலமும், ஆழமும் குறைவாக உள்ளதால் ஆற்றை ஆழப்படுத்தி, கரையை அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான தொகையை பெற்று அடையாறு ஆறு முழுவதும் எங்கெங்கெல்லாம் ஆழம் மற்றும் ஆற்றின் அகலம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் ஆழப்படுத்தி, அகலப்படுத்தி மீண்டும் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள்
அடையாறு ஆற்றில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. ஆற்றில் எங்கெல்லாம் குறுகி இருக்கிறதோ அதன் அருகே உள்ள நிலங்களை பெற்று ஆற்றை அகலப்படுத்துவது குறித்தும், அடையாறு ஆற்றை போலவே தண்ணீர் செல்ல ஒரு தனி வழி உருவாக்கி அடையாறு கால்வாய்-1, அடையாறு கால்வாய்-2 என உருவாக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.