மத்திய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே தொடங்கிய பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தை செல்லக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் நேதாஜி ரோடு, பழையபேட்டை காந்தி சிலை, தர்மராஜா கோவில் ரோடு வழியாக சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நிறைவடைந்தது. அங்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் செல்லக்குமார் எம்.பி. பேசியதாவது:-
50 லட்சம் பேர் இறப்பு
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கையாண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா தொற்று இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. நாடு முழுவதும் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கிறது. உயிரிழப்பு விவரங்கள் மறைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் நடராஜன், துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில்ஜேசு, நகர தலைவர் முபாரக், மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, பொதுச்செயலாளர் அப்சல், ஆறுமுக சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளனமானோர் கலந்துகொண்டனர்.