கோவில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம்
நாகர்கோவில் அருகே இடப்பிரச்சினையால் கோவில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 30 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே இடப்பிரச்சினையால் கோவில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 30 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவில்
நாகர்கோவில் அருகே சின்னணைந்தான் விளையில் பிச்சைக்கால சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு குடும்ப கோவில் ஆகும்.
இந்த கோவிலின் வடக்கு பக்க நுழைவு வாயில் இடம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. அந்த இடத்துக்கு வரி செலுத்தி, கோவிலை பராமரிப்பவர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு நுழைவு வாயில் மற்றும் மதில் சுவர் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கோவில் நுழைவு பாதை இடத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுசீந்திரம் பாலீசில் புகார் செய்யப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் 4 கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கோவில் நுழைவு வாயிலில் 4 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அங்கு சேறும், சகதியுமாக இருந்ததால் மற்ற 3 பெட்ரோல் குண்டுகளும் வெடிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்தவர்களும் காயமின்றி தப்பினர். மேலும் அந்த கும்பல் அங்கு இருந்த மின்சார விளக்குகள் மற்றும் 10 இ்ருக்கைகளை ஆயுதங்களால் அடித்து நொறுக்கினார்கள்.
பின்னர் அந்த பகுதியில் சத்தம் கேட்டு வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதற்கிடையே அந்த கோவிலை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளுடன் கோவில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் குண்டு வீசி, கோவில் மின் விளக்குகளை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
30 பேர் கும்பல் மீது வழக்கு
இந்த சம்பவம் பற்றி கோவில் தலைவர் அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் சின்னணைந்தான் விளையை சேர்ந்த முத்துலிங்கம், அவருடைய தம்பி கணேசன், மருமகன் ஆனந்த், தம்பி மகன் ராஜூ மற்றும் மனோஜ், கிருஷ்ணன் மற்றும் கண்டால் தெரியும் 24 பேர் என 30 பேர் மீது புகார் செய்தார்.
அதன் பேரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.