ஆற்று வெள்ளத்தில் தொழிலாளி அடித்து செல்லப்பட்டார்
திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றபோது தொழிலாளி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருவட்டார்,
திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றபோது தொழிலாளி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
திருவட்டார் அருகே உள்ள அணக்கரை முளங்கூட்டுவிளை பகுதியை சேர்ந்த டேவி என்ற டேவிட்சன் (வயது 49), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் நேற்று காலை அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளிக்க சென்றார்.
ஆற்றில் தண்ணீர் ஏற்கனவே வரத்து அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஆற்றில் டேவிட்சன் ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார்.
அடித்து செல்லப்பட்டார்
அப்போது திடீரென அவர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இதனை கவனித்த சிலர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினர். அவர்களால் காப்பாற்றவும் முடியவில்லை. உடனே இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் மற்றும் குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டேவிட்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளதால் தீயணைப்பு துறையினர் படகு மூலம் தேட முடியவில்லை. பின்னர் திருவட்டார் பாலம், மூவாற்று முகம் உள்ளிட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சோகம்
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்கச் சென்ற தொழிலாளி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.