மணப்பாறை பகுதி வெள்ளக் காடானது

தொடர் மழையின் காரணமாக மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வெள்ளக்காடானது.

Update: 2021-11-28 20:26 GMT
மணப்பாறை
 மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வந்தது. குடிநீர் கேட்டு சாலைக்கு வந்து பொதுமக்கள் போராடினர். இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மணப்பாறை உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
80 கிராமங்கள்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து மேலும் அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காட்டாற்று வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் பொய்கைப்பட்டி அருகே சாலையை கடந்து மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதேபோல, கீழகோட்டைக்காரன்பட்டி பகுதியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நள்ளிரவில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஊருக்கு வெளியே அழைத்து வந்து மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையோரத்தில் கட்டி வைத்தனர்.
 இதுமட்டுமின்றி விளைநிலங்களில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. கல்பாளையத்தான்பட்டி, ராயம்பட்டி, புதுப்பட்டி, சமுத்திரம், கத்திரக்காரன்பட்டி, இடைக்காட்டனூர், சித்தாநத்தம் என 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் காட்டாற்று தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் மக்கள் சாலையில் செல்ல முடியாமல் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளக் காடானது
மணப்பாறை நகரின் பிரதானமாக உள்ள மணப்பாறை குளத்திற்கு அதிக அளவில் மழைநீர் வந்தவண்ணம் இருந்ததால் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அந்த தண்ணீர் திண்டுக்கல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை மூழ்கடித்து சிதம்பத்தான்பட்டி, எம்.ஜி.ஆர். நகரை நோக்கி சென்றது. சொக்கலிங்கபுரம் பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணப்பாறை பஸ் நிலையம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போலீஸ் லைன், முத்தன்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் குளம்போல தேங்கி இருந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மான்பூண்டி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பொதுமக்கள் பார்வை
நீர்நிலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை பொதுமக்கள் பார்வையிட்டு வருவதுடன் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல்சமது, தாசில்தார் சேக்கிழார், ஒன்றியக்குழு தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி, குணசேகரன், பழனியாண்டி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறையினர், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்