நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் 15 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்
நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் 15 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிவதற்கு வழி இல்லாமல் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதுபற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காரைக்குறிச்சி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கோவைத்தட்டை ஏரியின் பிரதான பாசன வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு நீர் வழித்தட வாய்க்கால்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் நீர்வழி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர். அப்போது சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. இதில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குறிச்சி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பாக ஒத்துழைத்த அதிகாரிகள் குழுவினருக்கு அப்பகுதி இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.