விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள்

தஞ்சை மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளன. விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. உடனே வடிகால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-28 20:02 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளன. விளை நிலங்களில் தண்ணீர் வடியாததால் அழுகும் நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. உடனே வடிகால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயல்பை விட அதிக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. தொடர் மழையின் காரணமாக தஞ்சை மாநகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் பராமரிப்பு இல்லாத வீட்டுமனைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அருகில் வசிப்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அழுகும் பரங்கிக்காய்
மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் விளை நிலங்களிலும் மழை தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர வாழை, மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், பரங்கிக்காய் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சையை அடுத்த ஆவிக்கரை பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி-பத்மாவதி தம்பதியினருக்கு சொந்தமான விளை நிலம் கண்டியூர் பகுதியில் உள்ளது.
இந்த விளை நிலத்தில் பரங்கிக்காய் சாகுபடி செய்து இருந்தனர். தொடர் மழையின் காரணமாக பரங்கிக்காய் கொடியிலேயே அழுகி வீணாகிவிட்டது. அழுகாத பரங்கிக்காய்களை பறித்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் வயல்களிலேயே பரங்கிக்காய் குவித்து வைக்கப்பட்டு, அழுகி வீணாகிவிட்டது.
கரைபுரண்டோடும் தண்ணீர்
ஏற்கனவே வயல்களிலும், வடிகால்களிலும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த ஆறுகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிளை ஆறுகளிலும் தண்ணீர் அதிகஅளவில் செல்கிறது.
தஞ்சையை அடுத்த அரசூர்-அம்மன்பேட்டை பகுதியில் வெட்டாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சில இடங்களில் கரைகளை தாண்டி தண்ணீர் வழிந்தோடுவதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அரசூர் பகுதியில் குமார் என்பவர் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்துள்ளார். வெட்டாற்றில் தண்ணீர் அதிகஅளவில் செல்வதால் கரையை கடந்து தண்ணீர் வழிந்தோடியதால் வாழை மரங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உடைப்பு
தொடர்ந்து இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாழை இலை தளிர்விடுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவையாறு உள்ளிட்ட பல இடங்களில் வாழை மரங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தஞ்சையை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி, குழிமாத்தூர் பகுதியில் கோணக்கடுங்கலாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் காணப்படும் விளை நிலங்கள் கடல்போல் காட்சி அளிக்கிறது.
மண் மூட்டைகளை அடுக்கிய விவசாயிகள்
மேலத்திருப்பூந்துருத்தியில் மட்டும் 3 இடங்களில் கோணக்கடுங்கலாற்றில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மணல் மூட்டைகளை டிராக்டரில் எடுத்து வந்தனர். பின்னர் மணல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி மதகு தடுப்புச்சுவரின் வழியாக சென்று பின்னர் ¼ கிலோமீட்டர் தூரத்தற்கு வரப்பில் நடந்து சென்றனர்.
பிறகு உடைப்பு ஏற்பட்ட கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்புகளை சரி செய்தனர். மேலும் குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கோணக்கடுங்கலாற்றில் ஆகாய தாமரைகள் அதிகஅளவில் காணப்பட்டதால் மதகுகளில் சிக்கி கொண்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு கரைகளை கடந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
28 ஆயிரம் ஏக்கரில் மூழ்கிய பயிர்கள்
இதனால் விவசாயிகள் மதகுகளில் சிக்கி இருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் ஒவ்வொரு மதகுகள் இருக்கும் பகுதிகளிலும் விவசாயிகளும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் ஆகாய தாமரை சிக்கிவிடாமல் தள்ளிவிடுவதற்காக கம்புகளுடன் காத்து இருந்தனர். கோணக்கடங்கலாறு பகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் சக்கரை சாமந்தம், சீராளூர், அந்தலூர், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 28 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இவற்றில் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலத்தை கடந்து சென்ற தண்ணீர்
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 3 நாட்களில் தண்ணீர் வடிந்துவிட்டால் நெற்பயிர்களை காப்பாற்றி விடலாம். ஆனால் சில பகுதிகளில் நெற்பயிர்கள் அழுக தொடங்கிவிட்டன. எனவே வடிகால்களை தூர்வார வேண்டும் என்றனர்.
தஞ்சையை அடுத்த 8-ம் கரம்பை-ரெட்டிப்பாளையத்திற்கு இடையே முதலைமுத்துவாரி காட்டாறு செல்கிறது. இந்த காட்டற்றில் தண்ணீர் அதிகஅளவில் சென்றதால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் சென்றது. மேலும் ஆங்காங்கே கரைகளை தாண்டி தண்ணீர் வழிந்தோடியதால் வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் எல்லாம் மூழ்கின. சில இடங்களில் வயல்கள், வடிகால்கள் நிரம்பி சாலையை கடந்து தண்ணீர் சென்றது.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சில அடி தூரத்திற்கு இடிந்து விழுந்துவிட்டது. இடிந்த சுவர் சாலையின் பக்கமாக விழுந்துவிட்டது. இந்த சுவரின் அருகே தரைக்கடைகள் வைத்து வியாபாரம் நடைபெற்று வரும். மழையின் காரணமாகவும், இரவு நேரம் என்பதாலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மழைஅளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்ரில் வருமாறு:-
தஞ்சை-75, மஞ்சளாறு-66, பூதலூர்-60, திருவிடைமருதூர்-57, வல்லம்-53, பாபநாசம்-51, கும்பகோணம்-49, அய்யம்பேட்டை-46, அணைக்கரை-45, திருவையாறு-32, திருக்காட்டுப்பள்ளி-31, நெய்வாசல்தென்பாதி-21, மதுக்கூர்-19, ஈச்சன்விடுதி-16, குருங்குளம்-14, பட்டுக்கோட்டை-14, கல்லணை-13, வெட்டிக்காடு-13, அதிராம்பட்டினம்-13, ஒரத்தநாடு-10, பேராவூரணி-10.

மேலும் செய்திகள்