மாயமான மாணவன் குட்டையிலிருந்து பிணமாக மீட்பு

சிவகாசி அருகே மாயமான மாணவன் குட்டையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான்.

Update: 2021-11-28 19:58 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே மாயமான மாணவன் குட்டையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். 
மாணவன் மாயம் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் சேசுதாஸ் (வயது 39). இவருடைய மனைவி ஜோதி ராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் மைக்கேல்அஜய் (9). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மழை பாதிப்பு காரணமாக விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மைக்கேல் அஜய் பகல் 12 மணிக்கு வெளியே சென்றவன் பின்னர் வீடு திரும்பவில்லை. 
உடல் மீட்பு 
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத் தினர் சிறுவனை பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுவன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறுவனின் தந்தை சேசுதாஸ் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். 
அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மாயம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை சித்துராஜபுரத்தில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் மைக்கேல் அஜய் பிணமாக மிதந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவகாசி டவுன் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்