பா.ம.க. ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
புதுவையில் பா.ம.க. ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரன் கூறினார்.
புதுச்சேரி, நவ.
புதுவையில் பா.ம.க. ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அரசியல் ஆலோசனை குழு தலைவர் தீரன் கூறினார்.
அறிமுக கூட்டம்
புதுவை மாநில பா.ம.க. புதிய அமைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று காலை வழுதாவூர் சாலையில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில அமைப்பாளராக கணபதி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களாக வடிவேல், மதியழகன், துரை பிரபாகரன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் முருகன், மண்டல செயலாளர் சிவா, மாநில இளைஞர் அணி செயலாளர் சேகர், ஊடக பிரிவு செயலாளர் செல்வம், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன் கூறியதாவது:-
ஒத்துழைப்பு தர வேண்டும்
கட்சியில் புதிய ரத்தத்தை புகுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் புதிய மாநில அமைப்பாளர் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களை நியமித்துள்ளனர்.
புதுவையில் மக்கள் தொகை அடிப்படையில் 65 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் உள்ளனர். இங்கு யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்வதில் வன்னியர்களின் வாக்கு வங்கி பெரிதும் உதவி செய்துள்ளது.
இந்தியாவில் புதுச்சேரி, தமிழகம் தவிர மற்ற பகுதிகளில் பெரும்பான்மை தான் ஆட்சி செய்கிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் வேறு கட்சியில் இருந்து தான் முதல்-அமைச்சராக வந்துள்ளார்.
எங்கள் நோக்கம் புதுவையில் பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பா.ம.க. ஆட்சி அமைந்தால் அனைத்து சமுதாய மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கணபதி
மாநில அமைப்பாளர் கணபதி கூறுகையில், மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரியை புறக்கணித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் மாநில பிரச்சினைக்காக பா.ம.க. போராடும். அதே நேரத்தில் மாநில வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை கொடுக்கும். எங்கள் கட்சிக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. புதுவையில் பா.ம.க. சிறந்த கட்சியாக மாற போகிறது என்றார்.
____