ரூ.2¼ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
சோளிங்கர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2¼ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2¼ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் ஊழியர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. பாணாவரம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25-ந் தேதி இரவு விற்பனை முடிந்ததும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துக் கொண்டு ரெண்டாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தனது கிராமத்தின் அருகே சென்றபோது அங்கு போலீஸ் சீருடையில் ஒருவரும், மற்றொருவரும் சேர்ந்து பழனியை வழிமறித்து வாகனத்தின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காட்டுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிமம் வீட்டில் இருப்பதாக கூறிய பழனி வீட்டிற்கு வாருங்கள் காட்டுகிறேன் என்று கூறி அழைத்து சென்றுள்ளார்.
ரூ.2¼ லட்சம் வழிப்பறி
அங்கு தனது வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று ஓட்டுனர் உரிமம், வாகன உரிமத்தை எடுத்து வந்தபோது வெளியே நின்றிருந்த இருவரையும் காணவில்லை. அவர்கள் பணப்பையுடன் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கர்நாடகா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் போலீஸ் உடையுடன் ஒருவரும், மற்றொருவரும் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
இந்த நிலையில் சோளிங்கரை அடுத்த சோமசுந்தரம் பகுதியில் அதே கர்நாடக பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிள் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அப்பகுதியில் இருந்த தனசேகர் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பழனியிடம் பணத்தை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டதுடன், தன்னுடன் போலீஸ் உடையில் இருந்தவர் சோளிங்கர் கீழாடை மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரகு என்பதும், அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவில் இரண்டாம் நிலை காவலராக ஆக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ரகுவையும், தனசேகரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீஸ்காரரே வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சோளிங்கர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வழக்குகள்
கைதுசெய்யப்பட்ட ரகு, தனசேகரன் ஆகியோர் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனசேகர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.