கோவையில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்வு
கோவையில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்வு
கோவை
கோவையில் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் 4½ அடி உயர்ந்து உள்ளது.
தொடர்மழை
கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குளிர்கால மழையும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடைக்கால மழையும் பெய்யும்.
அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி கூடுதலாக அக்டோபர் 24-ந் தேதி வரை பெய்தது. இதன் மூலம் வழக்கமான சராசரி அளவான 210 மில்லி மீட்டரை தாண்டி, 236 மில்லி மீட்டராக பெய்தது. அதுபோன்று வடகிழக்கு பருவமழை யும் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
நீர்நிலைகள் நிரம்பின
இந்த தொடர்மழை காரணமாக கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் இந்த ஆறு மூலம் தண்ணீர் பெற்று வரும் 24 குளங்கள் நிரம்பின. மீதமுள்ள குளங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
அதுபோன்று ஏராளமான குட்டைகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் பல இடங்களில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட நீர்நிலைகளும் நிரம்பின. இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கோவை மாவட்டத்தில் குறிச்சி, ஒத்தக்கால்மண்டபம், திருமலை யம்பாளையம், எட்டிமடை, மதுக்கரை, செட்டிப்பாளையம், வெள்ளலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் அளவிடப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலத்தடி நீர்மட் டம் 11 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அக்டோபர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 9.66 மீட்டராக உயர்ந்தது. இதனால் இந்த ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் 1.34 மீட்டர் (4½ அடி) உயர்ந்து உள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் இறுதி வரை பெய்யும் என்பதால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.