தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம் வாகன போக்குவரத்துக்கும் தடை
கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் நின்ற பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெய்த கன மழையாலும் தென்பெண்ணையாற்றில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வரை சென்றது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இடித்து அகற்றம்
அந்த தண்ணீர் வடிந்து வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் தென்பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றக்கூடிய தென்பெண்ணையாற்றில் நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது.
தொடர் வெள்ளப்பெருக்கால் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றங்கரையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இருந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இதில் 3 தூண்கள், தனது பிடிமானத்தை இழந்து அந்தரத்தில் நின்றது. ஒரே ஒரு தூண் பிடிமானத்துடன், பயணிகள் நிழற்குடை சாய்ந்த நிலையில் இருந்தது. இதை பார்த்த கடலூர் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கையாக அந்த பயணிகள் நிழற்குடையை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
போக்குவரத்துக்கு தடை
தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலையை தண்ணீர் அரித்து வருவதால், அந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.
ஒரு வழிச்சாலையான மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, நேற்று 2 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஒரு வழிச்சாலையில் அனைத்து வாகனங்களும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும், அங்கு இருந்து கடலூருக்கும் வந்ததால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கெடிலம்
இதேபோல் கடலூர் கெடிலம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில், நேற்று வினாடிக்கு 12 ஆயிரத்து 25 கன அடி தண்ணீர் செல்கிறது.