விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையினால் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிமக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-28 16:49 GMT
விழுப்புரம்

கன மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது.

தண்ணீர் சூழ்ந்தது

அதன் பிறகு நேற்று காலை சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் காலை 8 மணியில் இருந்து இடைவிடாமல் மாலை 3 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால்  வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.
அதுபோல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் ஆசிரியர் நகர், லிங்கா நகர், தேவநாதசாமி நகர், கம்பன் நகர், பாண்டியன் நகர், பொன்.அண்ணாமலை நகர், கே.கே.சாலை அண்ணா நகர், தாமரைக்குளம், மருதூர் ஏரிக்கரை, ராகவன்பேட்டை, கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் அருகே பெரும்பாக்கம், தோகைப்பாடி, ஆரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கனமழையினால் தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி ஆறு, வராக ஆறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து கரையோர பகுதிமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தரைப்பாலம் துண்டிக்கும் அபாயம்

திருப்பாச்சனூர் மலட்டாற்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதை அடுத்து அங்கு கருங்கற்களை கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிந்து வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வந்தன. 
தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் திருப்பாச்சனூர் மலட்டாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தை தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் எந்த நேரத்திலும் தரைப்பாலம் தவெள்ளத்தில் அடித்துச்செல்லும் அபாயம் உள்ளதால் அந்த பாலத்தை பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் மூழ்கியது

மேலும் பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னங்குப்பம்- பள்ளியந்தூர் இடையேயுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தின் மேல் 3 அடிக்கு தண்ணீர் வேகமாக செல்வதால் காங்கேயனூர், பொன்னங்குப்பம், பள்ளியந்தூர், அரியலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்காக 10 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு கெடார் சென்று அங்கிருந்து விழுப்புரம் வந்து செல்கின்றனர். விக்கிரவாண்டி ஒன்றியம் கஸ்பா காரணை பகுதியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது திட்ட இயக்குனர் சங்கர், சுகாதார துணை இயக்குனர் பொற்கொடி, எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்