தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் படகில் சென்று பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் படகில் சென்று பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது

Update: 2021-11-28 16:10 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் படகில் சென்று பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது.
பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. சாலைகளும் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. நேற்று மாலை 5 மணி அளவில் நெல்லை சந்திப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம் தொடர் மழையால் நிரம்பி காணப்படுகிறது.
குறுக்குத்துறை முருகன் கோவில்
மேலும் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.
மணிமுத்தாறு அணை
இதேபோல் மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று பகலில் மழை பெய்தது. அணைக்கு தண்ணீர் வரத்து காலையில் வினாடிக்கு 1,395 கனஅடியாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 2,270 கன அடியாக அதிகரித்தது. இந்த அணை நீர்மட்டம் 104.20 அடியாக இருந்தது. 
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 37 அடியாகவும், கொடிமுடியாது அணை நீர்மட்டம் 50 அடியாகவும் உள்ளது. 
குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது. குற்றாலம் பஜாரிலும், பழைய குற்றாலம் செல்லும் படிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாலையில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பாவூர்சத்திரம், சங்கரன்கோவிலில் மாலையில் மிதமான மழையும், செங்கோட்டை, கடையநல்லூர்,  திருவேங்கடத்தில் சாரல் மழையும் பெய்தது. 
இந்த மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக திறந்து விடப்பட்டு உள்ளது. கடனாநதி அணையில் வினாடிக்கு 207 கன அடி தண்ணீர், ராமநதி அணையில் 30 கனஅடி, கருப்பாநதி அணையில் 70 கன அடி, குண்டாறு அணையில் 30 கன அடி,  அடவிநயினார் அணையில் 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது. இதை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடியில் லேசான வெயில் அடித்தது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. தூத்துக்குடி முத்தம்மாள்காலனி, ரகுமத் நகர், ஆதிபராசக்திநகர், தனசேகரன் நகர், பிரையண்ட்நகர், மறக்குடி தெரு, செயிண்ட் பீட்டர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 
படகு மூலம் காற்கறிகள் விற்பனை
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மீன்வளத்துறை ஏற்பாட்டில் சிறிய தெர்மாகோல் படகில், பண்ணை பசுமை காய்கறி கடை பணியாளர்கள் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பைகளை எடுத்து சென்றனர். அவர்கள் ரூ.100-க்கான காய்கறிகள் தொகுப்பை விற்பனை செய்தனர். இதே போன்று மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்த படகை பயன்படுத்தி வெளியிலும் வந்து சென்றனர்.
மேலும் தற்போது பெய்த மழையால் வயல்கள் அனைத்தும் மூழ்கி கிடக்கின்றன. இதனால் விவசாயி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே போன்று வாழைப்பயிர்கள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. 
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -28, சேர்வலாறு -4, மணிமுத்தாறு -27, அம்பை-4, சேரன்மாதேவி -4, பாளையங்கோட்டை -9, நெல்லை -5, நாங்குநேரி -2, ராதாபுரம் -5. தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 8 மணி வரை கடனாநதி -8, கருப்பாநதி -2, குண்டாறு -1, அடவிநயினார் -5, ஆய்க்குடி -2, தென்காசி -2, திருச்செந்தூர்- 2, காயல்பட்டினம் -1, விளாத்திகுளம்- 3, காடல்குடி - 3, வைப்பார்- 3, எட்டயபுரம்- 1, சாத்தான்குளம்- 2, ஸ்ரீவைகுண்டம்- 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்