விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும்

முதுமலை சாலையோரத்தில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-11-28 13:42 GMT
கூடலூர்

முதுமலை சாலையோரத்தில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனம் உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் சாலையாக காணப்படுகிறது. 

இதன் காரணமாக முதுமலையில் உள்ள அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பழுதடைந்த பாலங்கள், முக்கிய வளைவுகளில் இரும்பு தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

பள்ளத்தில் இறங்கிய கார்

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஊட்டியில் இருந்து கர்நாடகாவுக்கு சென்று கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று, முதுமலை அபயாரண்யம் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது.

அப்போது சாலையோரம் புதர்கள் நிறைந்த பள்ளம் இருப்பதை அறியாத காரின் ஒரு பகுதி பள்ளத்தில் இறங்கியது. தொடர்ந்து அந்தரத்தில் தொங்குவது போல சாலையோர பள்ளத்தில் கார் நின்று கொண்டு இருந்தது. 

எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்

இதை கண்ட மசினகுடி பகுதி வாகன டிரைவர்கள் ஓடி வந்து காருக்குள் இருந்தவர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்து மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மசினகுடி போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது முதுமலையில் முக்கிய இடங்களில் தடுப்புகள் இல்லாமல் உள்ளது. சாலையோர பள்ளங்களில் புதர்கள் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் விபத்தில் எளிதாக சிக்கி விடுகின்றன. இதனால் ஆபத்தான இடங்களில் இரும்பு தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் விழாத வகையில் கார் பத்திரமாக மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்