தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-27 22:37 GMT
தர்மபுரி:
 தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலபைரவர் ஜெயந்தி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா மற்றும் காலபைரவர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு 1008 ஆகம பூஜைகள், வேத பாராயணம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகள், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சத்ரு சம்ஹார யாகம்
விழாவையொட்டி காலை முதல் இரவு வரை உழவாரப்பணி குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் விழா கொடி இறக்கமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சண்முகம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
சக்கரத்து காலபைரவர்
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்து காலபைரவருக்கு ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்