3 நாட்களில் மருத்துவ கல்லூரியில் 281 பேருக்கு வைரஸ் தொற்று
எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 3 நாட்களில் அக்கல்லூரியில் வைரஸ் தொற்றால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு:
எஸ்.டி.எம். கல்லூரி
கர்நாடக மாநிலம் தார்வார் (மாவட்டம்) டவுனில் எஸ்.டி.எம். மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகள், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான அனைவரும் மருத்துவக்கல்லூரியில் உள்ள 2 விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கல்லூரிக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டது. இதுதவிர கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது.
புதிதாக 77 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இக்கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அந்த கல்லூரிக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு சுகாதார துறை அதிகாரிகளும், மருத்துவ குழுவினரும் விரைந்துள்ளனர். அந்த கல்லூரி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் மாவட்ட கலெக்டர் நிதீஷ் பட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் அங்கேயே கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மாவட்ட கலெக்டர் நிதீஷ் பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
281 ஆக உயர்வு
எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 17-ந் தேதி இக்கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியே கொரோனா பரவலுக்கு காரணம். மேலும் இக்கல்லூரிக்கு ஏராளமான மக்கள் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
பலர் கல்லூரிக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அவர்களையும் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். இதுவரையில் மேற்கொண்ட பரிசோதனையில் 281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இன்னும் 1,822 பேரின்...
இதுதவிர இன்னும் 1,822 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரவேண்டி உள்ளது. அவர்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயரும். தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளான அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்புக்கு உள்ளான பலருக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது. பலருக்கும் அறிகுறிகளே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா பரவல் காரணமாக எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியை சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.