ஆயிரம் ஏக்கர் பருத்தி- நெற்பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்தது
ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி- நெற்பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்தது.
விக்கிரமங்கலம்:
விளைநிலங்களில் வெள்ளநீர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அரசநிலையிட்டபுரம் மற்றும் முத்துவாஞ்சேரி இடையே மருைதயாறு செல்கிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் மருதையாற்று வெள்ளநீர் தாழ்வான அப்பகுதிகளில் சூழ்ந்துள்ளது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் ேதங்கி பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
அரசநிலையிட்டபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் முத்துவாஞ்சேரி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கட்டிலில் தூக்கிச்சென்றனர்
அரசநிலையிட்டபுரம் கிராமத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மருதையாற்று வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களை பாதுகாப்பாக விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பகுதியில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்கு மேல் தேங்கி இருந்ததால் நடக்க முடியாத முதியவர்களை அப்பகுதி வாலிபர்கள் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றனர். அவர்களுடன் சேர்ந்து தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், ஒரு முதியவரை கட்டிலில் தூக்கிச்சென்றார். இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.