போலீஸ் நிலையத்துக்கு ஆட்டுடன் புகார் அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தக்கு ஆட்டுடன் புகார் அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-27 18:18 GMT
வேலூர்

வேலூர் சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் விசாலாட்சி. இவரது மகள் இந்திரா (வயது 50). இந்திராவுக்கு குழந்தைகள் இல்லை.

இவருடைய கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அங்காளம்மனுக்கு மாலை அணிந்துள்ள இந்திரா தன்னை நாடி வரும் பொதுமக்களுக்கு வீட்டிலேயே குறி சொல்லி வருகிறார்.

மேலும் ஆட்டுக்கிடாவை அங்காளம்மனுக்கு நேர்ந்துவிட்டு வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அதேபகுதியில் வசிக்கும் சிலர் இரவு நேரங்களில் இந்திரா வீட்டின் மீது கற்களை வீசுவதாகவும், வீட்டுக்கு வெளியே கட்டியுள்ள ஆட்டை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

நேற்று இரவும் ஆட்டை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இந்திராவையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று காலை தனது ஆட்டுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த இந்திரா தன் மீதும் தனது ஆட்டின் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். 

பெண் ஒருவர் ஆட்டுடன் வந்து போலீசில் புகார் அளித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்