ரூ34 லட்சம் மோசடி செய்த தொண்டு நிறுவன நிர்வாகி உள்பட 3 பேர் கைது

மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து பணத்தை பெற்று ரூ34 லட்சம் மோசடி செய்த தொண்டு நிறுவன நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-11-27 18:16 GMT
வேலூர்

மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து பணத்தை பெற்று ரூ.34 லட்சம் மோசடி செய்த தொண்டு நிறுவன நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கிக்கடன்

நபார்டு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம், வேலூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகளை வழங்கி வருகிறது. 

இந்த நிறுவனம், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 126 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல லட்சம் ரூபாய் கடனுதவிகள் வழங்கி உள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஏரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 61) என்பவர் நடந்தி வந்துள்ளார். 

அதன் ஊழியர்களான தாட்சியாயினி (39), செல்வி (47), வினோதினி, ராஜம்மாள் ஆகியோர் மகளிர் குழுக்களிடம் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.

 அந்த பணத்தை அவர்கள் வங்கியில் கட்டவில்லை. இதனால் அந்த நிறுவன கோட்ட மேலாளர் லோகநாதன் தணிக்கை செய்த போது கோவிந்தன் மற்றும் அவரது தொண்டு நிறுவன நிர்வாகிகள் சேர்ந்து ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 வசூல் செய்து வங்கியில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக லோகநாதன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

போலீசார்  வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், தாட்சியாயினி, செல்வி ஆகியோரை கைது செய்தனர். வினோதினி, ராஜம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

---

மேலும் செய்திகள்