தொடர் மழையால் வைப்பாற்றில் 11 தடுப்பணைகளும் நிரம்பின
தொடர் மழையால் வைப்பாற்றில் உள்ள 11 தடுப்பணைகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. அங்கு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு கண்மாய்கள், நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
மேலும் தொடர் மழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக விளாத்திகுளம் பகுதியில் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் வைப்பாற்றில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, கல்கும்மி, ஆற்றங்கரை, வேடப்பட்டி, நம்பியாபுரம், சுப்பிரமணியாபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட 11 தடுப்பணைகளும் முழுமையாக நிரம்பி தண்ணீர் அதிகளவு வெளியேறி வருகிறது. வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
விளாத்திகுளத்தில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக செல்வதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகள் வைகத்து உள்ளனர்.
தடுப்பணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பல இடங்களில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் தண்ணீரில் குளித்து வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வைப்பாற்றில் உள்ள 11 தடுப்பணைகளும் முழுமையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் வீணாக மன்னார் வளைகுடா கடலுக்கு செல்லும் நிலை உள்ளதால் கூடுதலாக மேலும் 3 தடுப்பணைகள் வைப்பாற்றில் கட்டப்பட்டால் அதிகளவு தண்ணீர் தேங்கப்படுவது மட்டுமின்றி, விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
விளாத்திகுளம் பகுதியில் மிக முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வைப்பாறு. இந்த வைப்பாற்று மூலமாக 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரை பெற்று வருகின்றன. ஆனால் வைப்பாறு பகுதியில் அதிகளவு சீமைக்கருவேல மரங்கள் உள்ளதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்றினால் நிலத்தடி நீர் மட்டம் குறைவது தடுக்கப்படும் என்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.