வெளுத்து வாங்கிய மழை பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரத்தில் 14 செ.மீ. கொட்டியது விளைநிலங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது
பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பதிவானது. இதனால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
கடலூர்,
தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் மழை ஏதும் இல்லாமல் இருந்தது. அவ்வப்போது மேககூட்டங்களுக்கு இடையே சூரியன் வெளியே வந்து தலைகாட்டி சென்றது.
மாலை 5 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பரங்கிப்பேட்டை பகுதியில் மழை தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதாவது, மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை அதிகனமழையாக கொட்டியது. 2 மணி நேரத்தில் மட்டும் 14 செ.மீ. மழை பதிவானது.
நெற்பயிர்கள் பாதிப்பு
இதானல் இந்த பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளாதால், பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் புவனகிரி பகுதியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. புவனகிரி ஒன்றியம் கரிவெட்டடி, வளையமாதேவி, மதுவானைமேடு, துறிஞ்சிக் கொல்லை, பின்னலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டு குளம்போல் காட்சி அளிக்கிறது.
விருத்தாசலம் அடுத்த பெரம்பலூர், கொடுக்கூர், தொரவளூர், எடையூர், முகுந்த நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக விவசாய விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்துள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்
மாவட்டத்தின் தலைநகரான கடலூரை பொறுத்தவரை நேற்று மாலை 5 மணிக்கு மேல் சாரல் மழையாக தொடங்கியது. பின்னர் 6 மணிக்கு பிறகு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை இரவு 9.30 மணி வரை நீடித்தது. அதன் பிறகு நள்ளிரவு வரை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால், தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோவில், பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதிக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சாய்ந்து விழுந்த மரம்
இதேபோல் கடலூரில் பெய்த கனமழையின் போது வண்ணாரப்பாளையத்தில் சாலையோரமுள்ள மரம் ஒன்று சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதில் மின்வயர்களும் அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை வந்து, அறுந்து கிடந்த மின்வயர்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் வட்டம் அன்னவல்லி மதுரா சீதக்குப்பம் பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், ஓடையின் குறுக்கே இருந்த தரைப்பாலம் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.
இதற்கிடயே கடலூர் மாவட்டத்துக்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று பகல் முழுவதும் மழை ஏதும் இல்லாமல் இருந்து. மாலை 5.30 மணிக்கு மேல் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 14.6 செ.மீட்டரும், குறைந்தபட்சமாக கீழ்செருவாயில் 1.8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் சென்டி மீட்டரில் வருமாறு:-
கொத்தவாச்சேரி-12
அண்ணாமலைநகர்-11.3
சிதம்பரம்-11.1
புவனகிரி-9.5
லால்பேட்டை-7.8
காட்டுமன்னார்கோவில்-7.6
கடலூர்-7.6
வானமாதேவி-5.5
சேத்தியாத்தோப்பு-5
ஸ்ரீமுஷ்ணம்-4.6
குறிஞ்சிப்பாடி-4.5
பண்ருட்டி-4.5
வேப்பூர்-3.5
லக்கூர்-3.3
பெலாந்துறை-2.8
தொழுதூர்-2.7
விருத்தாசலம்-2.3
மே.மாத்தூர்-2.1