பெண்களிடம் நகைகள் பறித்த தந்தை மகன் கைது
உடுமலை சுற்றுப்பகுதியில் 2 பெண்களை வழிமறித்து தங்க சங்கிலிகளை பறித்துச்சென்ற வழக்கில் தந்தை மகன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதியில் 2 பெண்களை வழிமறித்து தங்க சங்கிலிகளை பறித்துச்சென்ற வழக்கில் தந்தை-மகன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வழிப்பறி சம்பவங்கள்
உடுமலை காந்திநகர் அருகே உள்ள யு.எஸ்.எஸ்.லே-அவுட் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 61). இவரது மனைவி பத்மாவதி (58). பத்மாவதி வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அதுபோல் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மாலை நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அதில் ஒருவர் கீழே இறங்கி வந்து பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். இதில் பத்மாவதி கீழே விழுந்ததும் 2 பேரும் சங்கிலியுடன் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதுபோல் உடுமலையை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூரைச்சேர்ந்த சரக்குவாகன டிரைவர் கோகுலகிருஷ்ணன் என்பவரின் மனைவி சத்யா (32), கடந்த 11-ந் தேதி தனது ஸ்கூட்டரில் உடுமலைக்கு வந்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மலையாண்டிக்கவுண்டனூரை அடுத்து கண்ணமநாயக்கனூர் சாலையில் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் சத்யா ஸ்கூட்டரின் முன்வந்து நிறுத்தியதில் சத்யா நிலைதடுமாறி விழுந்தார். அப்போது சத்யா அணிந்திருந்த தங்கத்தாலியை ஒருவர் பறித்துள்ளார். அப்போது சத்யா, தாலிச்செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டநிலையில் சங்கிலி அறுந்து அதில் 5 பவுன் சங்கிலியுடன் அவர்கள் தப்பிச்சென்றனர். இதுகுறித்தும் உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
தந்தை, மகன் கைது
இது தொடர்பாக உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களைத்தேடி வந்தனர். இதற்காக உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் உத்தரவின்பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தையா, ராஜ்கணேஷ், ஏட்டுகள் பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன், மணிகண்டன், முத்துமாணிக்கம் ஆகியோர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், அந்த வழிப்பறி ஆசாமிகள் 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் தாராபுரம் சகுணிபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (59) மற்றும் அவரது மகன் புருஷோத்தமன் (35) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 பெண்களிடம் பறித்த நகையை மீட்டனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட தந்தை மகன் இருவரும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2பேரும் இதுபோன்று பல்வேறு ஊர்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.