கொடைரோடு அருகே மாவூர் அணையில் உபரிநீர் திறப்பு
கொடைரோடு அருகே மாவூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட மொத்த உயரம் 36 அடியாகும். தற்போது சிறுமலையில் பெய்த மழை காரணமாக மாவூர் அணை நீர்மட்டம் 25 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக நேற்று முன்தினம் முதல் திறந்து விடப்படுகிறது.
இவ்வாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் புலமாசி குளம், அகரம் குளம், பொன்னன் குளம் ஆகிய கண்மாய்களை சென்றடைகிறது. இதனால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.