வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி உள்பட 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதில் 9 லட்சத்து 14 ஆயிரத்து 328 ஆண் வாக்காளர்கள், 9 லட்சத்து 63 ஆயிரத்து 349 பெண் வாக்காளர்கள், 197 இதரர்கள் என மாவட்டம் முழுவதும் 18 லட்சத்து 77 ஆயிரத்து 874 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் அதற்கான பட்டியல் மாவட்டத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தால் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
சிறப்பு முகாம்
மேலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்தனர்.
முன்னதாக கலெக்டர் விசாகன் முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இணையதளம் மூலமும், ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற செல்போன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்காக வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதில் வாக்காளர்கள் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்படும் என்றார்.