கொடைக்கானல் கோடைவிழாவையொட்டி பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு

கொடைக்கானல் கோடைவிழாவையொட்டி பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

Update: 2021-11-27 15:22 GMT
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளுகுளு சீசன் நிலவும். அப்போது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடக்கும். இதையடுத்து அடுத்த ஆண்டு நடக்கும் 59-வது கோடைவிழாவை காண வரும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் வகையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு கட்டங்களாக மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதன்படி முதற்கட்டமாக பிரையண்ட் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று காலை தொடங்கியது. இதை  தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இதில் முதற்கட்டமாக ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட சால்வியா, டெல்பினியம், பிங்க் ஆஸ்டர், லில்லியம், டெய்சி, அஸ்டமரியா உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையை பொருட்படுத்தாமல் பூங்கா ஊழியர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுகுறித்து பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கோடைவிழா மலர் கண்காட்சியை கருத்தில் கொண்டு தற்போது செடிகள் நடப்படுகிறது. இந்த செடிகள் வளர்வதற்கு ஏதுவாக  மழை பெய்கிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் மலர் கண்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மலர்கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அதிகமான மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது என்றனர். 

மேலும் செய்திகள்