முக கவசம் அணியாத வியாபாரிகளை கண்டித்த கலெக்டர்
தேனி வாரச்சந்தையில் முக கவசம் அணியாத வியாபாரிகளை கலெக்டர் கண்டித்தார்.
தேனி:
தேனி வாரச்சந்தையில், மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். சில நாட்களாக பெய்த மழையால் வாரச்சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறி இருந்தது. வாரச்சந்தைக்கு வந்த மக்களும், அங்கு கடைகள் அமைத்து இருந்த வியாபாரிகளும் வாரச்சந்தையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு செய்தபோது வாரச்சந்தையில் காய்கறி விற்பனை செய்த வியாபாரிகள் பலர் மற்றும் பொதுமக்கள் பலரும் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை கலெக்டர் கண்டித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். பின்னர், தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் மதுரை சாலையில் உள்ள கடைகளில் கலெக்டர் சோதனை செய்தார்.
அப்போது மதுரை சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்'வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக, ஆண்டிப்பட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசும் போது, அந்த கிராமத்தில் மழைநீர் செல்ல முடியாமல் பாதையை மறித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். அந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் தடையின்றி கடந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.