தொடர் மழையால் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
குன்னூர், மஞ்சூரில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி
குன்னூர், மஞ்சூரில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக பலத்த காற்று வீசும்போது மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மஞ்சூரில் பலத்த மழை காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலை குந்தா பாலம் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையோரத்தில் மண் விழுந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர். சில இடங்களில் மண்ணோடு பாறைகளும் விழுந்தன. அவை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
வீடு சேதம்
மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். சேரனூர் பகுதியில் ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது. இந்த வீட்டை வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை காரணமாக குன்னூரில் இருந்து கிளண்டேல், உலிக்கல், நான்சச், ஆர்செடின், பில்லூர்மட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. சாலையின் நடுவே மண் விழுந்ததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மண் சரிவு அகற்றப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீராகி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.