தர்மபுரியில் ரெயில் மோதி என்ஜினீயர் பலி
தர்மபுரியில் ரெயில் மோதி என்ஜினீயர் பலியானார்.
தர்மபுரி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்துகிடந்தார். இதுபற்றி தகவலறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்து கிடந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் (வயது 24) என்பதும், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்து இருப்பது உறுதியானது. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது விபத்தில் சிக்கினாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பைரவன் எழுதிய ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.