கற்பழிப்புக்கு உள்ளானதால் கர்ப்பம் அடைந்த சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கற்பழிப்புக்கு உள்ளானதால் கர்ப்பம் அடைந்த சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
16 வயது சிறுமி கர்ப்பம்
பெலகாவி மாவட்டத்தில் ஒரு 16 வயது சிறுமி வசிக்கிறாள். அந்த சிறுமி ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டு இருந்தாள். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருந்தாள். இதுபற்றி சிறுமிக்கோ, அவரது தாய்க்கோ தெரியாமல் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பது தாய்க்கு தெரியவந்தது. இதையடுத்து, தனது மகள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சிறுமியின் வயிற்றில் கரு உருவாகி ஏறக்குறைய 24 வாரங்கள் ஆகியிருப்பது தெரியவந்தது. இதனால் கருவை கலைக்க டாக்டரும், பெலகாவி மாவட்ட கலெக்டரும் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதனை எதிர்த்து சிறுமியின் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
கருவை கலைக்க அனுமதி
இதையடுத்து, அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சய் கவுடா முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், கற்பழிப்புக்கு உள்ளான 16 சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வாரங்கள் ஆன கருவை கலைப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி சஞ்சய் கவுடா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘‘இந்த விவகாரத்தில் சட்டத்தை காரணம் காட்டி கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுப்பது தவறு. பெண்களுக்கு அதற்கான உரிமைகள் இருக்கிறது. இது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் ஆகும். அதனால் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க, அவருக்கு உரிமை இருக்கிறது’’ என்றும் நீதிபதி சஞ்சய் கவுடா தெரிவித்துள்ளார்.