கரியகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கரியகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பெத்தநாயக்கன்பாளையம், நவ.27-
தொடர் மழை காரணமாக கரியகோவில் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியகோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தினந்தோறும் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெல்ல மெல்ல நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் கரியகோவில் அணையின் புதிய வரைவு விதிகளின்படி ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பிய பின்னரே கரியகோவில் அணையில் நீர் தேக்கி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ள எச்சரிக்கை
அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியதையொட்டி கரியகோவில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 52 அடி கொள்ளளவு கொண்ட கரியகோவில் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளது.
இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 110 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வசிஷ்ட நதி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.