அ.தி.மு.க.வினருக்கு விருப்ப மனுக்கள் வினியோகம்

அ.தி.மு.க.வினருக்கு விருப்ப மனுக்கள் வினியோகம்

Update: 2021-11-26 20:26 GMT
ஓமலூர், நவ.27-
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்கள் வினியோகத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
விருப்ப மனுக்கள்
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைதொடர்ந்து ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விருப்ப மனுக்களை கட்சியினருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள்
இதையடுத்து ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், கருப்பூர், காடையாம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் எடப்பாடி, ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்டபேரூராட்சி, நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதனை நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சந்திரசேகர் எம்.பி., மாநில அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் சித்ரா (ஏற்காடு), ராஜமுத்து (வீரபாண்டி), சுந்தரராஜன் (சங்ககிரி), நல்லதம்பி (கெங்கவல்லி), ஜெய்சங்கர் (ஆத்தூர்), முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அசோகன், (ஓமலூர் வடக்கு), கோவிந்தராஜ் (ஓமலூர் தெற்கு), காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சேரன், செங்குட்டுவன், சுப்பிரமணியம், தாரமங்கலம் ஒன்றிய செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர்கள் சரவணன் (ஓமலூர்), கோவிந்தசாமி (கருப்பூர்), கணேசன் (காடையாம்பட்டி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
29-ந் தேதி வரை
வருகிற 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யும் பணிகள் நடைபெறும். விருப்ப மனுவை பெறுபவர்கள் 29-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்