திருமண கோஷ்டி தவற விட்ட 46 பவுன் நகைகள்
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருமண கோஷ்டி தவறவிட்ட 46 பவுன் தங்க நகைகளை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருமண கோஷ்டி தவறவிட்ட 46 பவுன் தங்க நகைகளை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
ரெயிலில் தவற விட்ட நகைகள்
நாகர்கோவில் வட்டக்கரை வளன் நகரை சேர்ந்தவர் மெற்றில்டா (வயது 62). இவருடைய மகள் ஜெமினா (36). இவருடைய கணவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மெற்றில்டாவின் உறவினர் திருமணம் சென்னையில் நடந்தது. இதற்காக மெற்றில்டாவும், அவருடைய மகள் மற்றும் குடும்பத்தினரும் சென்னைக்கு சென்றனர். அப்போது திருமண நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் எடுத்துச் சென்றனர்.
இந்தநிலையில் திருமணம் முடிந்து நேற்று முன்தினம் அவர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். அந்த ரெயில் நேற்று காலையில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்த மெற்றில்டா குடும்பத்தினர் அவசர, அவசரமாக கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சரி பார்த்த போது, இருக்கையின் கீழ் ைவத்திருந்த 46 பவுன் தங்க நகைகள் இருந்த பையை எடுக்க தவறியது தெரிய வந்தது. அதற்குள் அவர்கள் வந்த ரெயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது.
போலீசார் மீட்டனர்
இதனால் பதறிப்போன மெற்றில்டா அங்கு நின்று கொண்டிருந்த ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்த ரெயில்வே போலீசார் ஐசக் சாமுவேல் ராஜ், மகாராஜா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் 2 பேரும் மெற்றில்டா பயணம் செய்த பெட்டியில் இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் பத்திரமாக இருந்தது. உடனே நகைகளை மீட்டு நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு தான் மெற்றில்டா குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
பாராட்டு
பின்னர் ரெயில்வே போலீசார், மெற்றில்டா குடும்பத்தினரிடம் நகைகளின் அடையாளங்களை கேட்டறிந்தனர். அவர்கள் சொன்ன அடையாளங்கள், மீட்கப்பட்ட நகைகளில் இருந்தது. தொடர்ந்து 46 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, உரியவரிடம் ஒப்படைத்தார். மெற்றில்டாவின் குடும்பத்தின் சார்பில் சரவணன் என்பவர் பெற்று சென்றார். விரைந்து செயல்பட்டு நகைகளை மீட்டு கொடுத்த ரெயில்வே போலீசாரை, மெற்றில்டாவின் குடும்பத்தினர் பாராட்டியதோடு, நன்றியும் தெரிவித்தனர்.