நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்தது:கொல்லிமலையில் 43 மி.மீட்டர் மழை பதிவானது; பள்ளிகளுக்கு விடுமுறை

கொல்லிமலையில் 43 மி.மீட்டர் மழை பதிவானது. பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது.

Update: 2021-11-26 17:35 GMT
நாமக்கல்:
பள்ளிகளுக்கு விடுமுறை
நாமக்கல், ராசிபுரம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய இடியுடன் பரவலாக மழை பெய்தது. அதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 43 மி.மீட்டர் மழை பதிவானது.
விடிய, விடிய மழை பெய்ததால் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை நாமக்கல், நல்லிப்பாளையம், புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 
மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் சிலர் குடை பிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்ததால், குளிர்ந்த காற்று வீசியது.
கொல்லிமலையில் மரம் சாய்ந்தது
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. தற்போது கொல்லிமலையில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
கொல்லிமலைக்கு செல்ல காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நள்ளிரவில் 21-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, சாலையில் விழுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் பாறைகளும் சாலையில் விழுந்தன. இதன் காரணமாக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன. 
இதைத்தொடர்ந்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்றனர். அவர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி, பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர். மேலும் சாலையில் கிடந்த பாறைகளையும் அகற்றினர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.
மழை அளவு
இதனிடையே கொல்லிமலையில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். மேலும் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை-43, சேந்தமங்கலம்-34, மோகனூர்-30, எருமப்பட்டி-23, ராசிபுரம்-21, பரமத்திவேலூர்-20, புதுச்சத்திரம்-20, குமாரபாளையம்-19, திருச்செங்கோடு-17, நாமக்கல்-16, மங்களபுரம்-14, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-3. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 260 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்