பூஞ்சோலை கிராமத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

பழனி குதிரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பூஞ்சோலை கிராம தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2021-11-26 16:40 GMT
பழனி: 


குதிரையாறு அணை
பழனி அருகே குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் இருபுறமும் பூஞ்சோலை, குதிரையாறு கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குதிரையாறு அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வரத்தானது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. எனவே குதிரையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குதிரையாறு பகுதியில் இருந்து பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து பூஞ்சோலை கிராமத்திற்கான போக்குவரத்து           முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பூஞ்சோலை கிராம மக்கள் குதிரையாறு பகுதி, பாப்பம்பட்டிக்கும், குதிரையாறு பகுதி விவசாயிகள் பூஞ்சோலையில் உள்ள விவசாய நிலங்களுக்கும் செல்ல முடியாமல் தவித்தனர்.

மேம்பாலம் அமைக்க கோரிக்கை
இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் குதிரையாறு அணை கரை வழியை பயன்படுத்தி கொள்ள பூஞ்சோலை கிராம மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் தற்காலிகமாக குதிரையாறு அணை கரை வழியாக பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டும் இதே போல வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது தரைப்பாலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது. எனவே எங்கள் பகுதிக்கு உயர்மட்ட மேம்பாலம் விரைவில் அமைத்துக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்