மேலும் ஆயிரம் டன் யூரியா உரம்
மேலும் ஆயிரம் டன் யூரியா உரம் கொண்டுவரப்பட உள்ளது என வேளாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்,
மேலும் ஆயிரம் டன் யூரியா உரம் கொண்டுவரப்பட உள்ளது என வேளாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நெல் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 923 மி.மீ. மழை பெய்துள்ளது. அதில் அக்டோபர், நவம்பரில் மட்டும் 473 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது நெற்பயிர்கள் 50 முதல் 65 நாட்கள் பயிராக உள்ளது. மாவட்டத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
களை எடுத்தல், உரமிடுதல் ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தசமயத்தில் மேல் உரம் இடுவதற்கு தேவைப்படும் ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 1344 டன் டி.ஏ.பி 217 டன், பொட் டாஷ் 55 டன், காம்ப்ளக்ஸ் 1727 டன் இருப்பில் உள்ளது. இதுவரை யூரியா உரம் 14,545 டன் வரப்பெற்று இதுவரை 13,271 டன் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு ரெயில்
தற்போது உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். ஏற்கனவே கூடுதலாக ஆயிரம் டன் யூரியா மூடைகள் சிறப்பு ரெயில் மூலம் ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் வேளாண்மைதுறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோரின் நடவடிக்கையால் தற்போது மேலும் ஆயிரம் டன் யூரியா மூடைகள் சிறப்பு ரெயில் மூலம் ராமநாத புரத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் விவசாயிகளுக்கு யூரியா விற்பனை செய்யப் படும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ் தெரிவித்துள்ளார்.