ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது

Update: 2021-11-26 14:21 GMT
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
20 ஆயிரம் கன அடி தண்ணீர்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் தடுப்பணையை தாண்டி விழுந்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் செல்கிறது.
தாமிரபரணி ஆற்றுடன் காட்டாற்று வெள்ளமும் கலப்பதால், கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பியதால் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் முழுவதும் வீணாக கடலுக்கு செல்கிறது.
ரெயில்வே சுரங்கப்பாதையில்...
ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரி, கிளாக்குளம் பகுதியில் குளங்கள் நிரம்பியதால், வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை வடிய வைத்தனர். அங்கு தாழ்வான இடங்களில் வசித்தவர்களை மீட்டு, கோவிலில் தங்க வைத்து உணவு வழங்கினர்.
தாதன்குளம்- கிளாக்குளம் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணி நடந்தது. அங்குள்ள மங்கம்மாள் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் தெற்கு காரசேரி வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றன.
ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் குளம் நிரம்பியதால், ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால், குளத்தின் கரையை உடைத்து அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றினர்.

மேலும் செய்திகள்