சேறும் சகதியுமான பள்ளி வளாகம்

சேறும் சகதியுமான பள்ளி வளாகம்

Update: 2021-11-26 14:06 GMT
பெரியவாளவாடியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகம் சேறும், சகதியுமாக ஆனதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
தொடக்கப்பள்ளி
உடுமலையை அடுத்த பெரியவாளவாடியில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெரியவாளவாடி சின்னவாளவாடி பளையூர் அம்மாபட்டி மொடக்குப்பட்டி, சர்க்கார்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா தளர்வுகளுக்கு பின்பு 2 ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பள்ளிக்கு அருகில் உள்ள குட்டை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அந்த குட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி வளாகம் மற்றும் கட்டிடங்களை சுற்றிலும் தேங்கி நிற்கிறது
மேலும் வளாகம் சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் அதில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு வருகை தருகின்ற மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு வகுப்பறைகளை அடைய வேண்டி உள்ளதால் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால் பழைய பள்ளி கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பெரியவாளவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேங்கி வருகின்ற மழைநீரை அகற்றுவதுடன் மண்கொட்டி சீரமைக்க வேண்டும். அத்துடன் குட்டையை ஒட்டியவாறு கழிவுநீர் கால்வாய் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். இதனால் தண்ணீர் பள்ளி வளாகத்திற்குள் செல்வதும் தடுக்கப்பட்டு விடும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்