பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான அரசு விடுதிகள்; செங்கல்பட்டு கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
செங்கல்பட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்காக 16 விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள், 1 கல்லூரி மாணவ விடுதி மற்றும் 1 பழங்குடியினர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்டபடிப்பு பயிலும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் உணவு மற்றும் தங்குமிடம் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதியானது, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் நிலையத்திற்கு தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம் மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து. இந்த மாதம் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சலுகைகளை பெற்று பயனடையுமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.