பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
திருப்பூர்
திருப்பூரில் நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி நேற்று நடந்த வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பு காரணமாக ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
பின்னலாடை தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பனியன் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும், வரலாறு காணாத நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு, தொழிலாளர் அமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், கடையடைப்பு நேற்று திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்த இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, நிட்மா, டெக்மா, டெக்பா, சாயசலவை ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை தொழில் நிறுவனங்கள், மூலப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்றன. பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டன.
ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
அதுபோல் பின்னலாடை சார்ந்த நிறுவனங்கள், சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் பட்டறைகள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் செயல்படவில்லை. அதன்படி நேற்று 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. அதுபோல் வணிகர் சங்க அமைப்பினர் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால் கடைகள், ஓட்டல்கள், டீக்கடை, பேக்கரிகள் பெரும்பாலும் திறந்து இருந்தன. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாநகரின் பல பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
நேற்று நடந்த முழு அடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக உள்நாட்டு ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் வர்த்தகம் உள்பட மொத்தம் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
-------------