விவசாயிகள் தர்ணா

விவசாயிகள் தர்ணா

Update: 2021-11-26 13:19 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் மாற்றப்பட்டதால் இடவசதியில்லாமல் விவசாயிகள் வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட அரங்கு மாற்றம்
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வழக்கமாக 2வது தளத்தில் அறை எண்.240ல் பெரிய அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். ஆனால் நேற்று தரைத்தளத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.
அந்த அரங்கில் இருக்கைகள் குறைவாக இருந்தது. அதிகமாக விவசாயிகள் வந்திருந்தனர். அதிகாரிகள் ஒருபுறம் அமர்ந்திருக்க இருக்கை வசதியில்லாதது குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டனர். வழக்கமாக நடக்கும் கூட்ட அரங்கில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அதற்கு கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், விவசாயிகள் மேஜையை தட்டியது உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவம் நடந்ததால் கூட்ட அரங்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கூட்ட அரங்குக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் பங்கேற்க கலெக்டர் சென்றுவிட்டதால், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூட்டத்தை நடத்தினார். கலெக்டர் வந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து தர்ணாவை தொடர்ந்தனர். இதன் காரணமாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாசல் முன் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மகாதேவன் ஆகியோர் வந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வழக்கமான கூட்ட அரங்கில் நடத்த வேண்டும்
விவசாயிகள் தரப்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு கூட்டத்தை வருகிற 30ந் தேதிக்குள் மீண்டும் நடத்த வேண்டும். வழக்கமாக நடக்கும் அறை எண்.240ல் கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்கள். இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினார்கள். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன்காரணமாக நேற்று குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகளை கொண்டு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
--------------

மேலும் செய்திகள்