வெள்ளகோவில் அருகே கடப்பாரையால் தாக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றிய போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
துப்புரவு பணியாளர்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் வயது 62. இவரது மனைவி பூங்கொடி 55. இவர்களுக்கு சாந்தி ரேவதி என்ற 2 மகள்களும், விநாயகன் , என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு ரேவதி இறந்துவிட்டார். சாந்தி குடும்பத்துடன் தாராபுரத்தில் வசித்து வருகிறார். குருநாதன் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். பூங்கொடி அருகில் உள்ள நூல் மில்லில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
கடப்பாரையால் தாக்கி கொலை
இந்த நிலையில் கடந்த 24ந்தேதி வழக்கம்போல் பூங்கொடி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் கணவன்மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென்று வீட்டில் பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டது.
இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பூங்கொடியின் பின் தலையில் குருநாதன் கடப்பாரையால் தாக்கிவிட்டு கடப்பாரையை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதில் பூங்கொடி பரிதாபமாக இறந்தார்.
கணவர் கைது
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூங்கொடியின் பிரேதத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குருநாதன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குருநாதனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளகோவிலை அடுத்த நாட்ராயன் சாமி கோவில் அருகே வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்ராயன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த குருநாதனை போலீசார் கைது செய்தனர்.
எதற்காக மனைவியை கொலை செய்தாய் என்று குருநாதனிடம் போலீசார் விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் எதுவும் கூற மறுப்பதாகவும் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வதாகவும் போலீசார் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி தெரிவித்தார். பின்னர் குருநாதனை காங்கேயம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.