நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை வைகை அணையில் 14 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து 14 மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரத்து 232 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-26 12:47 GMT
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக  71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்றுமுன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 
இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 232 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் வைகை அணையின் 7 பெரிய மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் என மொத்தம் உள்ள 14 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. இதில் ஆற்றுப்படுகை வழியாக மட்டும் 6 ஆயிரத்து 713 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
இதன் காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணைக்கு பிரதான நீர்வரத்தாக வைகை, கொட்டக்குடி, சுருளியாறு உள்ளன. இந்த ஆறுகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் ைவகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் தேனி மாவட்டத்தில் மழை பெய்வது நின்று விட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. 
இதனிடையே வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அணை முன்பாக உள்ள தரைப்பாலம் முழுமையாக தண்ணீரில் மூழ்கி விட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது.

மேலும் செய்திகள்